ஆர்ஆர்ஆர் ஆஸ்கர் விருது வெற்றி: நடிகர் ராம்சரணை சந்தித்து வாழ்த்து கூறிய உள்துறை மந்திரி அமித்ஷா
|ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றது.
டெல்லி,
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'ஆா்ஆா்ஆா்' திரைப்படம் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது.
அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இதனிடையே, ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த இசை (ஒரிஜினல் பாடல்) பிரிவில் ஆஸ்கர் விருது வென்றது.
இந்தப் பாடலில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம் சரணின் நடனம், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. எம்.எம். கீரவாணி இசையமைப்பில் உருவான இந்தப் பாடலை, ராகுல் மற்றும் கால பைரவா பாடினர்.
கீரவாணி இசையில் உருவான நாட்டு நாட்டு பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்ற நிலையில் தற்போது ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலில் நடனமாடிய ஆர்ஆர்ஆர் திரைப்பட நடிகர் ராம் சரணை உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ஆஸ்கர் விருது வென்றதற்கு ராம் சரணை அமித்ஷா வாழ்த்தினார். இந்த சந்திப்பின் போது ராம் சரணுடன் அவரது தந்தை சிரஞ்சீவி உடன் இருந்தார்.