ஆலியா பட் நடித்துள்ள 'ஜிக்ரா' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
|'ஜிக்ரா' படத்தில் இதுவரை பார்த்திராத அவதாரத்தில் ஆலியா பட் நடித்துள்ளார்.
மும்பை,
இந்தி சினிமாவில் முக்கியமான நடிகையாக இருக்கும் ஆலியா பட் 2012-ல் 'ஸ்டூடண்ட் ஆப் தி இயர்' என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் 'ஹைவே, உட்தா பஞ்சாப், ராஜி, கல்லி பாய், ராக்கி ராணி' போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் அடுத்ததாக ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.
கடந்த 2022-ம் ஆண்டு நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கணவருடன் இணைந்து 'லவ் அண்ட் வார்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது ஆலியா பட், இயக்குனர் வாசன் பாலா இயக்கத்தில் ' ஜிக்ரா' என்ற புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ஆலியா பட்டின் எடர்னல் சன்ஷைன் புரொடக்சன்ஸ் மற்றும் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. தி ஆர்ச்சீஸ் நடிகர் வேதாங் ரெய்னா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இதுவரை பார்த்திராத அவதாரத்தில் ஆலியா பட் நடித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி வைரலாகின. இந்த திரைப்படம் அண்ணன்- தங்கை இடையேயான உறவை காட்டும் விதமாக உருவாகி உள்ளது. இப்படம் வருகிற 11-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தநிலையில், 'ஜிக்ரா' படத்திற்கு யு/ஏ சான்றிதழை தணிக்கை குழு வழங்கி உள்ளது. மேலும் இப்படம் 155 நிமிடங்கள் (2 மணிநேரம் 35 நிமிடங்கள்) இயங்கும் நேரத்தைக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.