'தி காஞ்சுரிங் 4': பேட்ரிக் வில்சன், வேரா பார்மிகாவுடன் இணைந்த பிரபலங்கள்?
|பேட்ரிக் வில்சன் மற்றும் வேரா பார்மிகாவுடன் மேலும் இரண்டு நட்சத்திரங்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாஷிங்டன்,
உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட திகில் படங்களில் ஒன்று 'தி காஞ்சுரிங்'. இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான பேய் படம். இந்த படத்தின் வெற்றியையடுத்து அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இதன் முதல் பாகம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது.
இப்படத்தை ஜேம்ஸ் வான் இயக்க பேட்ரிக் வில்சன், வேரா பார்மிகா, லிலீ டெய்லர், ஜோய் கிங், ரோன் லிவிங்ஸ்டன், ஷேன்லி கேஷ்வெல் மற்றும் பலர் நடித்தனர். இதனையடுத்து இதன் 2-ம் பாகம் 2016-ம் ஆண்டிலும், 3-ம் பாகம் 2021-ம் ஆண்டிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
விரைவில் 4-ம் பாகமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 'தி காஞ்சுரிங் 4' படத்தில், ஏற்கனவே பேட்ரிக் வில்சன் மற்றும் வேரா பார்மிகா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் இரண்டு நட்சத்திரங்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, இப்படத்தில் 'எக்ஸ்-மென்: அபோகாலிப்ஸ்', 'லவ் அட் பர்ஸ்ட் சைட்' உள்ளிட்ட படங்களில் நடித்த பென் ஹார்டி மற்றும் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'தி பீஸ்ட் மஸ்ட் டை' பட பிரபலம் மியா டாம்லின்சன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.