நடிகை சோனா வீட்டின் சுவர் ஏறி குதித்து கத்தியை காட்டி மிரட்டிய இருவர் கைது
|நடிகை சோனா வீட்டின் சுவர் ஏறி குதித்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
தமிழ் திரையுலகில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சோனா. இவர், 'குசேலன்' படத்தில் நடிகர் வடிவேலுவுக்கு மனைவியாக நடித்து இருந்தார். அத்துடன் மேலும் பல தமிழ் படங்களிலும் கவர்ச்சி வேடங்களில் நடித்து உள்ளார். நடிகை சோனா, சென்னை மதுரவாயல் அடுத்த கிருஷ்ணா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மர்மநபர் ஒருவர் கையில் கத்தியுடன், நடிகை சோனா வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தார்.
பின்னர் வீட்டின் வளாகத்தில் வெளிப்புறமாக வைத்திருந்த ஏ.சி. எந்திரத்தை திருடிச்செல்ல முயன்றார். அப்போது சோனா வீட்டில் வளர்த்து வரும் நாய், மர்மநபரை கண்டு பயங்கரமாக குரைத்தது. நாயின் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த நடிகை சோனா வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது கையில் கத்தியுடன் மர்மநபர் ஏ.சி. எந்திரத்தை திருட முயற்சிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் திருடன் திருடன் என கூச்சலிட்டார். உடனே மர்மநபர், கையில் இருந்த கத்தியை காட்டி நடிகை சோனாவை மிரட்டி விட்டு, வெளியே மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த நண்பருடன் தப்பிச்சென்று விட்டார்.
இதுகுறித்து சோனா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் சோனா வீட்டின் சுவர் ஏறி குதித்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டிய சிவா, லோகேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரிடமும் மதுரவாயல் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.