பொன்னியின் செல்வன் 'குந்தவை' ஆக மாறிய திரிஷா...
|நடிகை திரிஷா, டுவிட்டர் பக்கத்தில் தனது பெயரை ‘குந்தவை’ என மாற்றியுள்ளார்.
சென்னை,
கல்கியின் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனிடையே ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 6 பாடல்களும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டு படத்தின் டிரைலரை வெளியிட்டனர். இதனை தொடர்ந்து படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு இறங்கியுள்ளது.
இந்த நிலையில் நடிகை திரிஷா, டுவிட்டர் பக்கத்தில் தனது பெயரை 'குந்தவை' என மாற்றியுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகை திரிஷா, சோழ மன்னர் ராஜராஜ சோழனின் மூத்த சகோதரியான குந்தவையின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில், மிகவும் ஆளுமை மிக்க பெண் கதாபாத்திரமாக 'குந்தவை' கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த கதாபாத்திரத்தில் நடிகை திரிஷாவைக் காண அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் திரிஷா தற்போது தனது டுவிட்டர் கணக்கில் 'குந்தவை'
என பெயர்மாற்றம் செய்துள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.