கமலுடன் ஜோடி சேர்ந்த திரிஷா... வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு...!
|கமல் ஹாசனின் 234வது படத்தின் பெயர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் 234-வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணையவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். தற்காலிகமாக 'KH 234' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பெயர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. ரசிகர்கள் படத்தின் தலைப்பை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் படத்தில் நடித்துள்ள முக்கிய நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பை படக்குழு ஒன்றன்பின் ஒன்றாக அறிவித்து வருகிறது. அதன்படி பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் இந்த படத்தில் இணைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் வெளியான 'சீதாராமன்' திரைப்படம் இவருக்கு இந்திய அளவில் ரசிகர்களை பெற்று தந்தது.
தற்போது துல்கர் சல்மான் கமல் ஹாசனின் 234வது படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளார். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நடிகை திரிஷா மன்மதன் அம்பு, தூங்காவனம் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு இந்த படத்தில் கமலுடன் இணைந்து நடிக்க உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.