திரிஷாவின் முதல் தெலுங்கு படம் 18 ஆண்டுகளுக்கு பிறகு மறு ரிலீஸ்
|திரிஷாவின் முதல் தெலுங்கு முதல் படமான வர்ஷம் படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மறு ரிலீஸ் செய்துள்ளனர்.
திரிஷா சினிமாவில் 20 ஆண்டுகளை கடந்தும் இன்னும் கதாநாயகியாக தொடர்கிறார். முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருக்கிறார். இந்தியிலும் நடித்துள்ளார். தற்போது இளம் நடிகைகள் போட்டிக்கு மத்தியிலும் அவரது மார்க்கெட் சரியாமல் இருக்கிறது. சமீபத்தில் திரைக்கு வந்த பொன்னியின் செல்வன் திரிஷாவுக்கு இன்னொரு திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த படத்துக்கு பிறகு சம்பளத்தையும் உயர்த்தி கேட்கிறார். இந்த நிலையில் திரிஷாவுக்கு இன்னொரு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக அவர் தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக நடித்து 2004-ல் வெளியான முதல் படமான வர்ஷம் படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் மீண்டும் மறு ரிலீஸ் செய்துள்ளனர்.
இதுகுறித்து திரிஷா கூறும்போது, ''எனது முதல் தெலுங்கு படம் 18 ஆண்டுகளுக்கு பிறகு மறு ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. அந்த படத்தில் நடித்தது நேற்று நடந்ததுபோலவே இருக்கிறது. திரைப்படங்கள் என்றென்றைக்குமானவை என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது. உங்களால்தான் நான்'' என்று மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். வர்ஷம் படம் தமிழில் ஜெயம் ரவி, ஸ்ரேயா ஜோடியாக நடிக்க மழை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.