தனுஷுக்கு ஜோடியாகும் அனிமல் பட நடிகை ?
|அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்த திரிப்தி டிம்ரி, தனுஷுக்கு ஜோடியாக ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தில் நடிக்கப் போகிறார் என்று புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
சென்னை,
நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனது 50வது படமான ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதைத்தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நடிகர் தனுஷ் இசைஞானி இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
தனுஷ் கடந்த ஆண்டு தேரே இஷ்க் மெய்ன் படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்தியில் உருவாகும் இந்த படத்தை பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்க இருக்கிறார்.
மேலும் ஏ. ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். ஏற்கனவே தனுஷ், ஆனந்த் எல் ராய் கூட்டணி ராஞ்சனா, அத்ரங்கி ரே ஆகிய படங்களில் இணைந்து இருந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக 'தேரே இஷ்க் மெய்ன்' திரைப்படத்திலும் இணைய இருக்கிறது. இதன் படப்பிடிப்பு 2024 அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என சமீப காலமாக செய்திகள் பரவி வருகிறது.
இந்நிலையில் , அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்த திரிப்தி டிம்ரி, தனுஷுக்கு ஜோடியாக 'தேரே இஷ்க் மெய்ன்' படத்தில் நடிக்கப் போகிறார் என்று புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.