'திருச்சிற்றம்பலம் அழகான படம்' - இயக்குனர் சங்கர் பாராட்டு
|நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்துக்கு இயக்குனர் சங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை,
இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
கடந்த ஆகஸ்ட் 18-ந்தேதி திரையரங்குகளில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 'திருச்சிற்றம்பலம்' அழகான திரைப்படம் என்று இயக்குனர் சங்கர் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "திருச்சிற்றம்பலம் அழகான திரைப்படம். அழகு என்பது வேதனையான தருணங்களைத் தொடர்ந்து வரும் அழகான தருணங்களில் உள்ளது.
நித்யா மேனனின் கதாபாத்திரம் மற்றும் அவரது சிறப்பான நடிப்பு அத்துடன் மித்ரன் ஜவஹரின் எழுத்து மனதை கொள்ளை கொண்டது. தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணி வழக்கம் போல் சிறப்பாக உள்ளது. பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் மற்றும் முழு குழுவையும் நேசிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.