'பண்ணவில்லை விமர்சனம், மக்களுக்கு வேண்டும் விமோச்சனம்'- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த டி.ராஜேந்தர்
|விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை,
அரசியலில் திரைப்பட நடிகர்கள் பல ஆண்டுகாலமாக கோலோச்சி வருகிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற தலைவர்களைத் தொடர்ந்து, சரத்குமார், கருணாஸ் உள்ளிட்டோரும் தனித்தனியாக அரசியல் கட்சிகளைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியிருக்கிறார். 'தமிழக வெற்றி கழகம்' எனப் பெயரிடப்பட்டு உள்ள அவரது கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் அரசியல் கட்சித் தொடங்குவது என்பது பல காலமாக பேசப்பட்டு வந்தாலும், இன்று அரசியல் கட்சியைத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் தனது பாணியில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 'அரசியல் என்பது பொது வழி. அந்த வழியில் யார் வேண்டுமானாலும் வரலாம், யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். எந்த தவறும் இல்லை. அரசியல் கட்சி தொடங்கிய விஜய்க்கு வாழ்த்துகள். நான் பண்ண விரும்பவில்லை விமர்சனம், கடவுளிடம் கேட்பது தமிழ்நாட்டு மக்களுக்கு விமோச்சனம்' என்று தெரிவித்தார்.