ரெயில் கடத்தல், இரட்டை வேடம்...!! ஜவானை வரவேற்க ஷாருக் கான் இல்லம் முன் நடனம் ஆடி மகிழ்ந்த ரசிகர்கள்
|நடிகர் ஷாருக் கான், ஜவான் படம் ரெயில் கடத்தல், இரட்டை வேடம்... ஜவானை வரவேற்க ஷாருக் கான் இல்லம் முன் நடனம் ஆடி மகிழ்ந்த ரசிகர்கள்
மும்பை,
அட்லீ இயக்கத்தில், நடிகர் ஷாருக் கான், நயன்தாரா நடிப்பில், அனிருத் இசையமைப்பில் ஜவான் படம் வருகிற 7-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது. ஜவான் படம் ரிலீசுக்கான நாட்கள் நெருங்க நெருங்க, அவருடைய ரசிகர்கள் இடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.
மும்பையில் உள்ள அவருடைய மன்னத் இல்லம் முன் ரசிகர்கள் இன்று திரண்டனர். அவருடைய பட பாடலின் இசைக்கேற்ப அவர்கள் நடனம் ஆடி மகிழ்ந்தனர். நடன குழுவை சேர்ந்த சிலர் பல்வேறு நடன வடிவங்களை வெளிப்படுத்தினர்.
சமீபத்தில், படத்தின் டிரைலர் வெளியானது. அதில் ஷாருக் கானின் தோற்றம் மற்றும் வசனங்கள் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தன.
அதில், ரெயில் ஒன்றை ஷாருக் கான் கடத்தி செல்வது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அவருடன் 6 பெண்கள் கொண்ட ஒரு குழுவும் சேர்ந்து செயல்படுகிறது. அவர்கள் நாடு முழுவதும் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
இந்த படத்தில் ஷாருக் கான் இரட்டை வேடங்களை ஏற்று நடித்திருப்பது போன்று காணப்படுகிறது. நாயகியாக வரும் நயன்தாரா போலீஸ் வேடம் ஏற்றுள்ளார். ஷாருக் கானுடன் காதல் காட்சிகளிலும் தோன்றுகிறார். எனினும், படம் பற்றிய விவரங்களை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகின்றனர்.
இந்த படத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் பல்வேறு வேடங்களை ஏற்றுள்ளனர். நயன்தாரா நாயகியாக நடிக்கும் படத்தில், நடிகர் விஜய் சேதுபதி வில்லன் வேடம் ஏற்றுள்ளார். தவிரவும், யோகிபாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
தீபிகா படுகோனே, சான்யா மல்கோத்ரா, சுனில் குரோவர் மற்றும் ரித்தி டோக்ரா ஆகியோரும் டிரைலரில் தோன்றுகின்றனர். அதில் சில அதிரடி காட்சிகளும் காணப்படுகின்றன.
சமீபத்தில், ஆடியோ வெளியீட்டுக்காக நடிகர் ஷாருக் கான் சென்னைக்கு வந்து சென்றார். பின்னர், பட விளம்பர பணிகளுக்காக அவர் துபாய் சென்றார். படம் பற்றிய புதிய போஸ்டர்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
ஜவான் படம் தவிர்த்து, டுங்கி படத்தில் அவர் நடித்து வருகிறார். இதில் நடிகை டாப்சி பன்னு நடித்து வருகிறார். படம் இந்த ஆண்டில் வெளிவர திட்டமிடப்பட்டு உள்ளது.