< Back
சினிமா செய்திகள்
சென்னையில் நடிகரின் கார் மோதி பைக்கில் சென்ற உதவி இயக்குநர் பலியான சோகம்
சினிமா செய்திகள்

சென்னையில் நடிகரின் கார் மோதி பைக்கில் சென்ற உதவி இயக்குநர் பலியான சோகம்

தினத்தந்தி
|
10 Jun 2023 10:11 AM IST

பிரபல இயக்குநர் வெற்றி மாறனின் உதவி இயக்குநராக இருந்த சரண் ராஜ் கார் மோதி உயிரிழந்து உள்ளார்.

சென்னை,

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சரண் ராஜ். நடிகர் தனுஷின் வடசென்னை மற்றும் அசுரன் போன்ற படங்களில் துணை நடிகராகவும் சில காட்சிகளில் அவர் நடித்து உள்ளார்.

சென்னை மதுரவாயலில் தனலட்சுமி தெருவில் வசித்து வந்து உள்ளார். இந்த நிலையில், சென்னையின் முக்கிய பகுதியான கே.கே. நகரில் ஆற்காடு சாலையில் கடந்த வியாழ கிழமை அவர் தனது பைக்கில் சென்றபோது, கார் ஒன்று அவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளது.

அந்த காரை ஓட்டி வந்த பழனியப்பன் என்பவரும் துணை நடிகர் ஆவார். பழனியப்பன் சம்பவம் நடந்தபோது, குடிபோதையில் இருந்து உள்ளார் என கூறப்படுகிறது.

இதில், கார் மோதிய வேகத்தில் பலத்த காயமடைந்த சரண் ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். அவர் ஹெல்மெட் அணியவில்லை என கூறப்படுகிறது.

இதுபற்றி கிண்டி போக்குவரத்து காவலர் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று உதவி இயக்குநரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். பழனியப்பனை கைது செய்து விசாரணை நடந்து வருகிறது. உதவி இயக்குநர் சரண் ராஜின் மறைவு திரையுலகினர் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்