கடந்த வாரத்தின் சிறந்த 5 கோலிவுட் செய்திகள்
|தமிழ் சினிமா அடிக்கடி அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது.
சென்னை,
தமிழ் சினிமா, அடிக்கடி அப்டேட்டுகள் மற்றும் தகவல்கள் கொடுப்பதன் மூலம் தொடர்ந்து பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது. வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பேசு பொருளாகி இருக்கின்றன. அந்த வகையில், கோலிவுட்டில் குறிப்பிடத்தக்க விவாதத்தை தூண்டிய கடந்த வாரத்தின் டாப் 5 கோலிவுட் செய்திகளை தற்போது காணலாம்.
1. 'கங்குவா' டிரெய்லர்
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
கடந்த 12-ம் தேதி இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்தில் 2 கோடி பார்வையாளர்களை கடந்தது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
2. சிவகார்த்திகேயனின் சர்ச்சை பேச்சு
சிவகார்த்திகேயனின் எஸ்கே புரோடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கொட்டுக்காளி'. இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், 'நான் யாரையும் கண்டுபிடிச்சு, இவங்களுக்கு நான்தான் வாழ்க்கை கொடுத்தேன்னு சொல்ல மாட்டேன். ஏனென்றால் என்னை அப்படி சொல்லி சொல்லியே பழக்கப்படுத்திவிட்டார்கள். நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை', என்று சிவகார்த்திகேயன் பேசினார். இவரின் இந்த பேச்சு சர்ச்சையாகியுள்ளது.
3. தேசிய விருது பெற்ற கோலிவுட் நட்சத்திரங்கள்
70-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 16-ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த பின்னணி இசை (ஏ.ஆர்.ரகுமான்), சிறந்த ஒலி அமைப்பு (ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி), சிறந்த ஒளிப்பதிவு (ரவிவர்மன்) ஆகிய 4 விருதுகளை 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் வென்றது. மேலும், திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை நித்யா மேனனும், சிறந்த நடனத்திற்கான விருதை ஜானியும் பெற்றனர்.
4. வசூல் சாதனை படைத்த தங்கலான்
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'தங்கலான்'. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகயும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தங்கலான் முதல் நாளில் மட்டும் உலகளவில், ரூ.26 கோடிக்கு மேல் வசூலித்தது. இது விக்ரம் நடிப்பில் முதல் நாளில் அதிக வசூல் செய்த 2-வது படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது.
5. தி கோட் டிரெய்லர்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் படத்தின் டிரெய்லர் கடந்த 17-ம் தேதி வெளியானது. சுமார் 2 நிமிடம் 51 வினாடிகள் நீளமுள்ள இந்த டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், யூடியூபில் தற்போது வரை தமிழில் 33 மில்லியன் பார்வைகளை கடந்து, டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் தெலுங்கில் 2.5 மில்லியன் பார்வைகளையும், இந்தியில் 3.5 பார்வைகளையும் பெற்று ஒட்டு மொத்தமாக 39 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இது குறித்த பதிவை படக்குழுவினர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.