என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு... மகளை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான பதிவு
|ரசிகர்களின் கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'லால் சலாம்' இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
சென்னை,
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. ரசிகர்களின் கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் மகள் ஐஸ்வர்யாவை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், 'என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.