'சூர்யா 42' படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் - பிரபல தயாரிப்பாளர் தகவல்
|'சூர்யா 42' படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் என்று பிரபல தயாரிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். 'சூர்யா 42' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இந்த திரைப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் 'சீதா ராமம்' படத்தில் நடித்த நடிகை மிருணாள் தாகூர் குறிப்பிட்ட காட்சிகளில் நடிக்கவுள்ளதாகவும் படத்திற்கு 'வீர்' என்று தலைப்பு வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்தி பரவி வந்தது.
இந்த நிலையில், பிரபல தயாரிப்பாளரான தனஞ்ஜெயன் 'சூர்யா 42' படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.