மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு..!
|மோகன் ஜி இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் நடிக்கும் 'பகாசூரன்' படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குனர் செல்வராகவன் சமீபத்தில் வெளியான 'பீஸ்ட்', 'சாணிக் காயிதம்' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதில் செல்வராகவனின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
செல்வராகவன் தற்போது 'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் நட்டி நட்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாம் சி எஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 'பகாசூரன்' படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்ற வாக்கியத்துடன் மகாபாரதம் புத்தகம் இடம்பெற்றுள்ளது. மேலும் இப்படம் இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் நடிகர் தனுஷ், இந்துஜா ரவிச்சந்தர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.