< Back
சினிமா செய்திகள்
அஜித்துக்கு வில்லனாக மிரட்டல் இயக்குனர்
சினிமா செய்திகள்

அஜித்துக்கு வில்லனாக மிரட்டல் இயக்குனர்

தினத்தந்தி
|
25 Sept 2022 6:46 AM IST

விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து இயக்கும் புதிய படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்க உள்ளார்.

எச்.வினோத் இயக்கத்தில் தற்போது அஜித்குமார் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார். படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த படத்தை முடித்துவிட்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இணைய உள்ளார் அஜித். இது அஜித்தின் 62-வது படம் ஆகும்.

"அஜித் நடிக்கும் புதிய படத்தில் 'மாஸ்' காட்டும் வில்லன் நடிகர் நிச்சயம் இருப்பார்" என்று சமீபத்தில் விக்னேஷ் சிவன் தெரிவித்து இருந்தார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்தது. அஜித்துடன் மோதும் வில்லன் கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதி, ராணா பெயர்களும் அடிபட்டன.

ஆனால் தற்போது அஜித்துக்கு வில்லனாக நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பல வெற்றி படங்களை இயக்கி தனக்கென தனி முத்திரை பதித்த கவுதம் வாசுதேவ் மேனன்தான் அந்த வில்லன் நடிகர் என்று கூறப்படுகிறது. கவுதம் வாசுதேவ் மேனன் சில படங்களில் நடித்துள்ளார். பலருக்கு 'டப்பிங்' வசனமும் பேசியிருக்கிறார். 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

அஜித் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்...' படத்தில் வரும் 'அதாரு... அதாரு...' என்ற பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். இப்போது விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து இயக்கும் புதிய படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்க உள்ளார்.

மேலும் செய்திகள்