< Back
சினிமா செய்திகள்
நந்தன் படத்தை பாராட்டிய  திருமாவளவன்
சினிமா செய்திகள்

'நந்தன்' படத்தை பாராட்டிய திருமாவளவன்

தினத்தந்தி
|
29 Sept 2024 7:53 PM IST

‘நந்தன்’ படத்தை பார்த்த வி.சி.க தலைவர் திருமாவளவன் படக்குழுவுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சென்னை,

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். அதற்குப்பின் 'ஈசன்' படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இறுதியாக வெளியான 'அயோத்தி' 'கருடன்' ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.

சசி குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'நந்தன்' திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சசிகுமார் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அயோத்தி திரைப்படக் கூட்டணி, 'நந்தன்' படத்திலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிராம பஞ்சாயத்து தேர்தல் மூலம் ஏற்படும் சாதியக் கொடுமைகள் பற்றி நந்தன் திரைப்படம் அழுத்தமாக தெரிவித்துள்ளது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், 'நந்தன்' திரைப்படத்தை பார்த்த விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. படக்குழுவுக்கு தனது பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

'ஆள்வதற்கு மட்டுமல்ல; வாழ்வதற்கும் அதிகாரம் தேவை' என உரத்துப் பேசும் இயக்குநர் ரா.சரவணனின் குரல் 'நந்தன்' குரலாக ஒலிக்கிறது. ஊராட்சி அமைப்புகளில் சாதியம் எவ்வாறு கோரத் தாண்டவம் ஆடுகிறது என்பதை துணிச்சலாயத் தோலுரிக்கிறார் இயக்குநர் சரவணன்.

ஊராட்சிமன்றத் தலைவர் அம்பேத்குமாரை நிர்வாணப்படுத்தி ஊரே வேடிக்கை பார்க்க செருப்புக்காலால் மிதிக்கும் குரூரம் நெஞ்சைப் பதைக்க வைக்கிறது. அது சட்டத்தையும் ஜனநாயகத்தையும் மிகக் கேவலமாக இழிவுப்படுத்தும் கொடூரமான சாதி ஆணவத்தின் உச்சம்.

உள்ளாட்சி அமைப்புகள் வரையில் எளியோருக்கும் அதிகாரத்தைப் பரவலாக்குவதுதான் ஜனநாயகத்தைச் செழுமைப்படுத்தும் நடவடிக்கை. ஆனால், ஊர்களின் வேர்களில் இன்னும் சனாதனமே கோலோச்சுகிறது; சாதியமே கொட்டமடிக்கிறது என்பதை ஆவேசத்துடன் அம்பலப்படுத்தும் தோழர் சரவணன் அவர்களுக்கு 'அடங்கமறுப்போரின்' சார்பில் எமது மனமார்ந்த பாராட்டுகள்.

நடிகர் சசிகுமார், நடிகர் சமுத்திரக்கனி ஆகியோர் நடத்தும் அறப்போர் ஜனநாயகத்தை உயிர்ப்பிக்கிறது. சாதியத்தின் கோரமுகத்தைக் கண்முன்னே நிறுத்துகிறார் இயக்குநர் பாலாஜிசக்திவேல். சாதிவெறியாட்டத்தை எதிர்க்கும் போர்க்குணம் பெண்களுக்கும் தேவையென்பதை உணர்த்துகிறார் சுருதிபெரியசாமி.

களப்பலியாகும் நாயகன் நந்தன் ஜனநாயகத்தை நாடும் போராளி. "இனிமேல் தான் எங்கள் ஆட்டம் ஆரம்பம் " என சீறும் சிறுத்தை அம்பேத்குமார் சமூகநீதியைக் காக்கும் போராளி. சாதியத்தின் வன்மம் கண்டு கொதிக்கும் தோழர் சரவணன் சமத்துவத்தைத் தேடும் போராளி. வெல்லும் ஜனநாயகம்! "

இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்