இந்த ஆண்டு வில்லனாக கலக்கிய ஹீரோக்கள்
|ரசிகர்களின் சினிமா ரசனை மாறி வருகிறது. அதுபோல் நடிகர்களும் கதாநாயகனாக மட்டுமே நடிப்பது என்று இல்லாமல், வில்லன் வேடங்களையும் ஏற்கும் மனநிலைக்கு மாறி வருகிறார்கள். இந்த ஆண்டு பல படங்களில் வில்லன்களாக நடித்தும் அவர்கள் வரவேற்பை பெற்றுள்ளனர்.
சூப்பர் ஹிட் படமான கே.ஜி.எப்.2-ம் பாகத்தில் மூத்த இந்தி நடிகர் சஞ்சய்தத் குரூர வில்லனாக நடித்து அசத்தினார். அல்லு அர்ஜுன் நடித்து வெற்றி பெற்ற 'புஷ்பா' படத்தில் மலையாள ஹீரோ பகத் பாசில் வில்லனாக வந்தார்.
கமல்ஹாசனின் 'விக்ரம்' வெற்றி படத்தில் வில்லன் ரோலக்ஸ் ஆக வந்து சூர்யா அதிர வைத்தார். அவர் நடித்தது சில நிமிடங்களே என்றாலும், ரசிகர்களை அசாத்திய நடிப்பால் கட்டிப் போட்டார். இன்னொரு கதாநாயகனான விஜய்சேதுபதி முக்கிய வில்லனாக நடித்து இருந்தார். இதற்கு முன்பு விஜய்யின் 'மாஸ்டர்' படத்திலும் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து மிரட்டினார்.
மலையாள சூப்பர் ஹிட் படமான 'ஐயப்பனும் கோஷியும்' படத்தின் தெலுங்கு ரீமேக் ஆக தயாரான 'பீம்லா நாயக்' படத்தில் ராணா வில்லனாக நடித்து புகழ்பெற்றார். அல்லு அர்ஜுனின் 'சரைநோடு' தெலுங்கு படத்தில் ஆதி வில்லனாக வந்தார். இதுபோல் 'குரு' என்ற இன்னொரு படத்திலும் ஆதி வில்லனாக நடித்து இருந்தார். "ஆர் எக்ஸ் 100'' தெலுங்கு படத்தில் ஹீரோவாக நடித்த கார்த்திகேயா அஜித்தின் 'வலிமை' படத்தில் வில்லனாக நடித்து பாராட்டை பெற்றார்.