'இதனால்தான் எனக்கு இந்தியாவில் இசைக்கச்சேரி நடத்த பிடிக்கும்' - பிரபல இங்கிலாந்து பாடகர் எட் ஷீரன்
|இந்திய ரசிகர்கள் துடிப்புடனும், உற்சாகத்துடனும் இருக்கிறார்கள் என்று எட் ஷீரன் கூறினார்.
மும்பை,
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பாடகர் எட் ஷீரன். இவர் தற்போது இந்தியா வந்துள்ளார். மும்பை வந்த அவர் அங்குள்ள ஒரு பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் பாடல்களை பாடி மகிழ்ந்தார். பின்னர், நடிகர் ஷாருக்கான் பாடகர் எட் ஷீரனை சந்தித்தார். அப்போது ஷாருக்கானின் சிக்னேச்சர் போசை செய்து இருவரும் நடனமாடினர். இது தொடர்பான வீடியோவை எட் ஷீரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த வீடியோ வைரலாகியது.
இந்நிலையில், இந்தியாவில் இசைக்கச்சேரி நடத்துவது குறித்து பேட்டி ஒன்றில் எட் ஷீரன் பேசுகையில்,
"இந்தியாவில் நான் அளவற்ற அன்பை உணர்கிறேன். பல நாடுகளில் இசைக்கச்சேரி நடத்தியிருக்கிறேன். அங்கு இருப்பவர்கள் இசையின் உற்சாகத்தை மனதில் உணர்ந்தாலும், பெரிதாக வெளிக்காட்ட மாட்டார்கள்.
இங்கு, இந்திய ரசிகர்கள் துடிப்புடனும், உற்சாகத்துடனும் இருக்கிறார்கள். அவர்களின் உற்சாகம் எனக்குள்ளும் பரவுகிறது. அதனால், இங்கு இசைக் கச்சேரி நடத்துவது எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசுகையில் "இந்தியாவில் நிறைய திறமையான கலைஞர்கள் இருக்கிறார்கள். நடனம், பாடல், நடிப்பு, இயக்கம் என அசத்துகிறார்கள். குறிப்பாக, சமீபத்தில் நான் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு பாடலின் நடனத்தைப் பார்த்து வியந்துபோனேன். அந்த படமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலிருக்கும் தொழில்நுட்ப வேலைகள் என்னை வியக்க வைத்தன" என்றார்.