விஜயகாந்த் பாடலை 'லப்பர் பந்து' படத்தில் வைக்க இதுதான் காரணம் - இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து
|விஜயகாந்த் சாரை கொண்டாடவேண்டுமென்று நினைத்தேன். அதனால்தான் ‘லப்பர் பந்து’ படத்தில் அவருடைய பாடல்களை வைத்துள்ளேன் என இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கூறியுள்ளார்.
சென்னை,
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ், சஞ்சனா, பால சரவணன், டி.எஸ்.கே, ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'லப்பர் பந்து' திரைப்படம், நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த ஆட்டக்காரராக இருக்கும் அட்டக்கத்தி தினேஷுக்கும், அவருக்கு நிகராகச் சிறந்த ஆட்டக்காரராக இருக்கும் துடிதுடிப்பான இளைஞர் ஹரிஷ் கல்யாணுக்குமிடையே நடக்கும் உணர்வு மோதல்களைக் கதைக்களமாகக் கொண்டு, கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது படம்.
'லப்பர் பந்து' படத்தில் கெத்து கதாபாத்திரத்தில் அட்டக்கத்தி தினேஷ், தீவிர விஜயகாந்த் ரசிகராக நடித்திருக்கிறார். அவருக்கான பில்டப் பாடலாக நடிகர் விஜயகாந்த் நடித்த பொன்மனச்செல்வன் படத்தின் 'நீ பொட்டு வச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்' என்ற பாடல் ஒலிக்கச் செய்யப்படுகிறது. இந்தப் பாடல் ஒலிக்கும்போது ரசிகர்களின் ஆராவாரத்தால் திரையரங்கமே அதிர்கிறது. இதுதான் விஜயகாந்த்துக்கு உண்மையான அஞ்சலி எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த 'லப்பர் பந்து' திரைப்படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவிடம், விஜயகாந்த் பாடல் பயன்படுத்தப்பட்டது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "நாம எல்லாரும் விஜயகாந்த்தின் ரசிகர்கள்தான். நானும், நடிகர் தினேஷும் நடிகர் விஜயகாந்த்தின் மிகப் பெரிய ரசிகர்கள். அதிலும் நான் தீவிர ரசிகன். அதனால், நான் எடுக்கும் முதல் படத்தில் கண்டிப்பாக விஜயகாந்த் சாரை கொண்டாடவேண்டுமென்று நினைத்தேன். அதனால்தான் லப்பர் பந்து படத்தில் அவருடைய பாடல்களை வச்சி, அவரைக் கொண்டாடினேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.