இது கதாநாயகிகள் காலம்
|கருப்பு வெள்ளை காலம் தொடங்கி இப்போது வரை சினிமாக்களில் கதாநாயகனை முன்னிறுத்திதான் கதை எழுதுவது வழக்கம். கதாநாயகிகள் என்றாலே வெளிநாடு போய் பாட்டுப்பாட வேண்டும்.
மரத்தைச் சுற்றி ஆட வேண்டும் என்ற நிலைதான் இருந்தது. ஆனால் சமீப காலமாக இதில் மாற்றங்கள் ஏற்பட்டு கதாநாயகிகளை மையப்படுத்தி இயக்குனர்கள் கதை எழுதி படம் எடுக்கத் தொடங்கி உள்ளனர். அந்த படங்கள் வெற்றி பெறுவதால் தொடர்ந்து நாயகிகளை மையப் படுத்தி நிறைய படங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
தென்னிந்திய படங்களில் இந்தக் கணக்கைத் தொடங்கி வைத்த பெருமை நயன்தாராவையே சேரும். அவர் நடித்த 'அறம்' படம் ரசிகர் களிடம் பெரிய வரவேற்பு பெற்றது. அந்தப் படத்தில் மாவட்ட கலெக்டராக காட்டன் சேலை உடுத்திய மிடுக்கான பெண்ணாக நயன்தாரா அசத்தியிருந்தார். தொடர்ந்து டோரா, ஐரா, கோலமாவு கோகிலா, நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் என்று நயன்தாராவைத் தேடி கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் படங்கள் வந்தன. திரைக்கு வர இருக்கும் `கனெக்ட்' படத்திலும் இவர்தான் முதன்மை வேடம்.
நயன்தாராவைத் தொடர்ந்து திரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், அமலாபால், டாப்ஸி, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற நடிகைகளும் கதையின் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார்கள். அந்த படங்களும் வெற்றி பெற்றன. திரிஷா மோகினி, நாயகி உள்ளிட்ட கதையின் நாயகி படங்களில் நடித்துள்ளார். பொன்னியின் செல்வனிலும் வலுவான வேடம்.
தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் சம பலத்தோடு இருக்கும் சமந்தா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்து வெளிவந்த `யசோதா' படம் அவருக்கு பெரும் புகழை பெற்றுக் கொடுத்தது. ஒரு ஹீரோ என்ன சாகசம் செய்வாரோ அவ்வளவையும் ஹீரோயினாக களத்தில் இறங்கி செய்து இருந்தார்.
கீர்த்தி சுரேஷும் கதையின் நாயகியாக எடுக்கப்படும் படங்களில் ஆர்வமாக நடித்து வரு கிறார். பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பயோகிராபியான நடிகையர் திலகம் அவருக்கு காலத்துக்கும் புகழ் சேர்க்கும் படமாக அமைந்தது. தொடர்ந்து பெண் குயின், சாணி காயிதம் போன்ற படங்களில் கீர்த்திதான் ஹீரோ, ஹீரோயின் எல்லாமே.
அமலா பால் நடித்த ஆடை, கடாவர் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் கதையின் நாயகியாக நடிக்கக் கூடிய படங்களும் வராமல் இல்லை. மோ, கனா, பூமிகா போன்ற படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷை பெண் ஹீரோவாக அடையாளப்படுத்திய படங்கள். அடுத்து அவர் கதையின் நாயகியாக நடித்துள்ள டிரைவர் ஜமுனா, பர்ஹானா போன்ற படங்கள் வர இருக்கின்றன.
டாப்சி இந்தியில் நிறைய படங்களில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.