இதுதான் சில்க் சுமிதா செய்த பெரிய தவறு - நடிகை ஜெயமாலினி
|நல்லநிலையில் இருந்தும் சில்க் சுமிதா தற்கொலை செய்து கொண்டது வருத்தமான விஷயம் என்று ஜெயமாலினி கூறினார்
சென்னை,
பிரபல நடிகை சில்க் சுமிதா 1996-ம் ஆண்டு தனது 35-வது வயதில் இறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், சாவில் மர்மம் இருப்பதாகவும் இரு விவாதங்கள் நடந்தன. சில்க் சுமிதா வாழ்க்கை சினிமா படமாகவும் வந்தது.
இந்த நிலையில் சில்க் சுமிதா மரணம் குறித்து கவர்ச்சி நடிகை ஜெயமாலினி தற்போது அளித்துள்ள பேட்டியில், "குறுகிய காலத்திலேயே பெயரும், பணமும், புகழும் சம்பாதித்தவர் சில்க் சுமிதா. படப்பிடிப்பு அரங்கில் எங்களுடன் அவர் பேச மாட்டார்.
ஒரு படத்தில் ஹீரோவை சுற்றி வரும் நடிகைகளாக நான் மற்றும் எனது சகோதரி ஜோதி லட்சுமி, சில்க் சுமிதா ஆகிய மூன்று பேரும் நடித்து இருக்கிறோம். நல்லநிலையில் இருந்தும் சில்க் சுமிதா தற்கொலை செய்து கொண்டது வருத்தமான விஷயம்.
ஆனால் சில்க் சுமிதா வாழ்க்கையில் செய்த பெரிய தவறை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். காதலிக்கலாம்... தவறில்லை. ஆனால் பெற்றோரை ஒதுக்கி வைக்கக்கூடாது. அவர் தனது தாயாரையும், சகோதரனையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஒருவரை மட்டும் நம்பி வாழ்ந்தார்.
உறவினர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டால் பாதி அவர்கள் தின்றாலும் கொஞ்சமாவது நமக்காக வைப்பார்கள். ஆனால் ரத்த சம்பந்தம் இல்லாதவர்களை வைத்துக்கொண்டால் அதுவும் நமக்கு உறவினர்கள் ஆதரவு இல்லை என்று அவர்களுக்கு தெரிந்தால் ஏமாற்றுவார்கள். அப்படித்தான் சில்க் சுமிதாவும் பலியாகிவிட்டார்'' இவ்வாறு கூறினார் .