'இந்த பெண்ணால் நடனமாட முடியாது' - கசப்பான அனுபவங்கள் குறித்து மனம் திறந்த கத்ரீனா கைப்
|இந்திய திரையுலகில் தனது வெற்றிப் பயணம் குறித்து கத்ரீனா கைப் மனம் திறந்து கூறியுள்ளார்.
மும்பை,
கடந்த 2003-ம் ஆண்டு வெளியான 'பூம்' திரைப்படம் மூலம் பாலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் கத்ரீனா கைப். தனது முதல் படத்திலேயே அமிதாப் பச்சன், ஜாக்கி ஷெராப் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த கத்ரீனா, தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக 'டைகர் 3', விஜய் சேதுபதியுடன் 'மெரி கிறிஸ்துமஸ்' உள்ளிட்ட படங்களில் கத்ரீனா நடித்திருந்தார்.
இந்த நிலையில், இந்திய திரையுலகில் தனது வெற்றிப் பயணம் குறித்து கத்ரீனா கைப் மனம் திறந்து கூறியுள்ளார். தனது நடனத்திறன் குறித்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டதாகவும், தான் ஒரு நடிகையாக மாற வாய்ப்பில்லை என்று பலர் தன்னிடம் நேரடியாக கூறியதாகவும் கத்ரீனா தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கத்ரீனா கூறியதாவது:-
நான் நடிகர் வெங்கடேசுடன் 'மல்லீஸ்வரி' திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, படப்பிடிப்பில் நடந்த ஒரு நிகழ்வு எனக்கு நினைவிருக்கிறது. செட்டில் ஒருவர், 'இந்த பெண்ணால் நடனமாட முடியாது' என்று மைக்கில் கூறிக்கொண்டிருந்தார். நான் அதை கேட்க நேர்ந்தது. ஆனால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
என் முகத்துக்கு நேரே பலர் கூறிய, நிறைய கருத்துக்கள் எனக்கு நினைவில் இருக்கின்றன. 'உன்னால் இதை செய்ய முடியாது', 'உன்னால் வெற்றிபெற முடியாது', 'இது வேலை செய்யாது', 'உன்னோடு இணைந்து பணியாற்ற முடியாது' என பலர் கூறியிருக்கின்றனர். ஆனால் இதெல்லாம் மாறிவிட்டது.
இதுபோன்று கூறிய அந்த நபர்கள் அனைவருடனும் நான் பணியாற்றினேன். அவர்கள் அனைவருடனும் படங்களில் நடித்தேன். அவர்கள் கூறியதை நான் இதயத்திற்கு எடுத்துச் சென்று, மனச்சோர்வடைந்து கைவிட்டிருந்தால், இது எதுவும் நடந்திருக்காது. இதுபோன்ற கருத்துக்கள் ஒருபோதும் என்னை ஆழமாக பாதிக்க நான் விடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.