இந்த முகத்துக்கு அதிக பட வாய்ப்புகள் வருகின்றன - நடிகர் யோகிபாபு மகிழ்ச்சி
|இந்த முகத்துக்கு அதிக பட வாய்ப்புகள் வருகின்றன என்று நடிகர் யோகிபாபு மகிழ்ச்சியோடு தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ள யோகிபாபு அதிக படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கதாநாயகனாக நடிக்கவும் வாய்ப்புகள் குவிகின்றன. ஒரு காலத்தில் அவரை ஒதுக்கியவர்கள் இப்போது கால்ஷீட் கேட்டு பின்னால் அலைகிறார்கள்.
இந்த நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து யோகிபாபு அளித்துள்ள பேட்டியில், "நான் காமெடி நடிகர்தான். அதிரடி சண்டை காட்சியில் நடிப்பது, உடம்பை முறுக்கேற்றுவது என்பதெல்லாம் எனக்கு தேவை இல்லாதது. என்னால் எதை செய்ய முடியுமோ அதை செய்வேன். கடைசிவரை நகைச்சுவை நடிகராகவே தொடர்வேன்.
இதுவரை 300 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். கஷ்டப்பட்டால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதற்கு நான் உதாரணமாக இருக்கிறேன். ஆரம்பகாலத்தில் வாய்ப்பு கேட்டு போனபோது என்னை அவமானப்படுத்தி வெளியேற்றிய இடங்களாக இருந்தாலும் அதே இடத்தில் இன்று போய் நடிக்கிறேன். நான் குணசித்திர வேடங்களிலும் சிறப்பாக நடிப்பதாக சொல்கிறார்கள். அதற்கு இயக்குனர்கள்தான் காரணம்.
இரவு-பகலாக படப்பிடிப்புகளுக்கு செல்கிறேன். வேலை கிடைக்கும்போது ஓய்வை பற்றி நினைக்க கூடாது. படப்பிடிப்பு ரத்தானால் மட்டும் வீட்டுக்கு வந்து குடும்பத்தோடு இருக்கிறேன். இந்த முகத்துக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வருகின்றன. யார் மீதும் பொறாமை இல்லை'' என்றார்.