சித்திரையின் தொடக்கத்தில் 'திருக்குறள்' படத்தின் படப்பிடிப்பு துவக்கம்
|ரமணா கம்யூனிகேஷன்ஸ் பட நிறுவனம் "திருக்குறள் " படத்தின் படப்பிடிப்பை தமிழ் புத்தாண்டு தினத்தில் துவங்கியது.
ரமணா கம்யூனிகேஷன்ஸ் பட நிறுவனம் ஏற்கனவே கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை "காமராஜ்" என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டது. அந்த படம் தமிழக அரசின் சிறப்பு விருதினைப் பெற்றதோடு , காமராஜர் வரலாற்றுக்கான ஆவணமாகத் திகழ்கிறது. தவிர மகாத்மா காந்தியின் வாழ்க்கையை ஒட்டி எடுக்கப்பட்ட " வெல்கம் பேக் காந்தி " என்ற படத்தையும் தயாரித்திருந்தது அதுவும் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
விஐடியின் நிறுவனர் டாக்டர் கோ. விசுவநாதன் வழங்க T.P.ராஜேந்திரனுடன் இணைந்து ரமணா கம்யூனிகேஷன்ஸ் தற்போது உலகின் ஆகச்சிறந்த அறநூலான திருக்குறளைத் திரைப்படமாகத் தயாரிக்கிறது.
தமிழ் புத்தாண்டு தினமான இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
அப்போது பேசிய படத்தின் இயக்குனர் A.J.பாலகிருஷ்ணன் "தேசத்தந்தை மகாத்மாவும், திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரும் இன்று உலக அரங்கில், அறிஞர்கள் மத்தியில் இந்தியாவின் முகங்களாக அறியப்படுகின்றனர். பிரபல ரஷிய எழுத்தாளர் 'டால்ஸ்டாய்' ஒரு கடிதத்தில் குறிப்பிட்ட பின்புதான் காந்திஜிக்கு திருக்குறள் அறிமுகமாகிறது. காட்சி ஊடகமோ எவ்வித தடையுமின்றி உலகின் அனைத்து மக்களையும் சென்றடையும் என்பதால் திருக்குறளைத் திரைப்படமாக்க இதுவும் ஒரு காரணம்.
திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் இத்திரைப்படத்தினை சப்-டைட்டிலோடு உலகெங்கும் திரையிடத் திட்டமிட்டுள்ளோம்.காமராஜ் திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனமெழுதிய செம்பூர்.கே.ஜெயராஜ் இத்திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுத A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்." என்று பேசினார்.