'நான் நடிகை சவுந்தர்யாவை போல இருப்பதாக சொல்வார்கள்' - ராஷ்மிகா மந்தனா
|நடிகை சவுந்தர்யா 2004-ம் ஆண்டு தேர்தலின் போது ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக பலியானார்.
சென்னை,
கர்நாடகாவைச் சேர்ந்தவர், நடிகை சவுந்தர்யா. 1992-ம் ஆண்டு 'பா நானா பிரீதீசு' என்ற கன்னட படத்தின் வாயிலாக சினிமா உலகில் அடியெடுத்து வைத்த இவர், 1993-ம் ஆண்டு 'பொன்னுமணி' படத்தில் கார்த்திக் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.
தொடர்ந்து ரஜினியுடன் 'அருணாச்சலம்', 'படையப்பா', கமலுடன் 'காதலா காதலா', அர்ஜூனுடன் 'மன்னவரு சின்னவரு', விக்ரமுடன் 'கண்டேன் சீதையை', விஜயகாந்துடன் 'தவசி', 'சொக்கத்தங்கம்', பார்த்திபனுடன் 'இவன்' உள்ளிட்ட படங்களில் நடித்து உச்ச நடிகையாக உயர்ந்தார்.
இது தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் 2004-ம் ஆண்டு தேர்தலின் போது, பா.ஜ.க.வுக்காக வாக்கு சேகரிக்க சென்றபோது ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக பலியானார். தற்போது இவரின் வாழ்க்கையை படமாக்கும் ஏற்பாடுகள் கன்னட திரையுலகில் நடந்து வருகின்றன.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா, சவுந்தர்யாவின் பயோபிக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில், 'நடிகை சவுந்தர்யாவின் பயோபிக் படத்தில் நடிக்க விருப்பம் இருக்கிறது. சிறுவயதிலிருந்தே என்னுடைய அப்பா நான் சௌந்தர்யாவை போல இருப்பதாக சொல்வார். அது எனக்கு பெருமையாக இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்' என தெரிவித்துள்ளார்.