"ஹீரோவுடன் நடிக்க ஒரு இரவு தங்க சொன்னார்கள்" - பிரபல நடிகை புகார்
|இந்தி நடிகை மிருனாள் நவேல் நடிக்க வாய்ப்பு தேடும்போது நேர்ந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
இந்தி நடிகையான மிருனாள் நவேல் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார். இவர் நடிக்க வாய்ப்பு தேடும்போது நேர்ந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து மிருனாள் நவேல் கூறும்போது, "பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் கொடுமையை சிறிய நடிகைகள் முதல் பெரிய நடிகைகள் வரை கடந்து வந்து இருக்கிறார்கள். எனக்கும் அது நேர்ந்தது. ஒரு விளம்பர படத்தில் நடிக்க நடிகை தேர்வு நடத்தினார்கள். அங்கு நான் சென்று இருந்தேன்.
அப்போது ஏஜெண்டு ஒருவர் நடிக்க வந்தவர்களை பரிசீலித்து இறுதியில் இருவரை தேர்வு செய்து இருக்கிறோம். அதில் நீங்களும் இருக்கிறீர்கள். உங்களை தேர்வு செய்தால் நீங்கள் ஹீரோ கார்த்திக் ஆர்யனுடன் இணைந்து விளம்பர படத்தில் நடிக்கலாம் என்று தெரிவித்தார். எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
ஆனால் மறுநாள் விளம்பர படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டுமானால் ஆசைக்கு உடன்பட வேண்டும் என்றும், ஒரு இரவு தங்க வேண்டும் என்றும் குறுந்தகவல் அனுப்பினார். அதை கேட்டு என் உடம்பெல்லாம் எரிந்தது. இந்த மாதிரி குறுக்கு வழியில் நடிக்க அவசியம் இல்லை என்றேன். உடனே அவர் மிகசிறந்த வாய்ப்பு இழந்து விடாதே. எல்லோரும் இதற்கு உடன்பட்டுத்தான் தேர்வாகிறார்கள்'' என்றார். நான் திட்டி விட்டேன். அந்த சம்பவம் மனதில் அப்படியே இருக்கிறது" என்றார்.