தென்னிந்திய சினிமா இயக்குநர்கள் அகங்காரம் பிடித்தவர்கள்- 'கஜினி' பட வில்லன்
|பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமாவில் மூன்று மடங்கு சம்பளம் தருவார்கள், ஆனால் அந்த திரைப்பட இயக்குநர்கள் அகங்காரம் பிடித்தவர்கள் என்று பேசி இருக்கிறார் பிரபல வில்லன் நடிகரான பிரதீப் ராவத்.
பாலிவுட்டின் பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் பிரதீப் ராவத். இவர் அமீர்கானின் லகான் திரைப்படம் மூலம் பாலிவுட்டுக்கு வெளியேயும் பிரபலமானவர். தமிழில் கஜினி மூலம் ரசிகர்களை மிரட்டினார். தமிழில் வெற்றிபெற்ற கஜினி, இந்தியில் அதே தலைப்பில் உருவானபோது, சூர்யாவின் தோற்றத்தில் அமிர் கான் நடிக்க, வில்லனாக பிரதீப் ராவத்தே தொடர்ந்தார்.
இவர் தற்போது அமீர் கானின் அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதனையொட்டி வடக்கு தெற்கு திரையுலகங்களுக்கு இடையிலான வேறுபாடாக பிரதீப் ராவத் ஒரு பேட்டியில் தெரிவித்திருப்பது சர்ச்சைக்கு ஆளாகி உள்ளது.
பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமாக்கள் அதிக சம்பளம் தருவார்கள் என்றாலும், தென்னிந்திய இயக்குநர்கள் அகங்காரம் பிடித்தவர்கள் என்று பிரதீப் ராவத் அந்த பேட்டியில் சாடி உள்ளார். தென்னிந்திய சினிமாவை புகழ்வது போல ஆரம்பித்து, அதன் இயக்குநர்களை பிரதீப் ராவத் சீண்டியும் உள்ளார்.
"வடக்கே ஒரு நாள் சம்பளமாக ரூ1 லட்சம் தருவார்கள் எனில், தெற்கே அதுவே மூன்று மடங்காக தினத்துக்கு ரூ3 லட்சம் வரை தருவார்கள். ஆனால் தென்னிந்திய இயக்குநர்கள் ஈகோ மிக்கவர்கள். அவர்கள் அருகே அண்டவிட மாட்டார்கள். 5 அடி இடைவெளி விட்டே நிற்க வேண்டும்" என்று அவர் பேட்டி அளித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.
அதே பேட்டியில் அமீர்கானின் கஜினி படத்துக்குப் பின்னர் பாலிவுட் தன்னை கைவிட்டாலும் தமிழ், தெலுங்கு போன்ற தென்னிந்திய திரைப்படங்களே தன்னை வாழ்வித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.