'ஒரு ஹீரோ தனியாக இருந்தால் பிரச்சனை இல்லை' - மறுமணம் குறித்து நடிகை மீனா விளக்கம்
|மீனாவின் கணவர் வித்யா சாகர் நுரையீரல் தொற்றினால் பாதிக்கப்பட்டு கடந்த வருடம் மரணம் அடைந்தார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்த மீனா 2009-ல் வித்யா சாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளார். அவரும் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மீனாவின் கணவர் வித்யா சாகர் புறாக்கள் எச்சத்தால் ஏற்படும் நுரையீரல் தொற்றினால் பாதிக்கப்பட்டு கடந்த வருடம் மரணம் அடைந்தார். அந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்த மீனாவை சக நடிகைகள் வெளியூர்களுக்கு அழைத்து சென்று கொஞ்சம் கொஞ்சமாக தேற்றி சகஜ நிலைக்கு மீட்டு வந்தனர்.
சமீப காலமாக மீனா மறுமணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து மீனா மறுத்த போதும், தொடர்ந்து இந்த செய்தி அவரைத் துரத்திய வண்ணமே உள்ளது. இதற்கு விளக்கம் அளித்து மீனா அளித்துள்ள பேட்டியில், என் வாழ்க்கையில் நான் குழந்தை நட்சத்திரமாக நடித்தது, அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாள, இந்தி மொழிகளில் கதாநாயகியாக நடித்தது இப்படி எதுவுமே திட்டமிட்டு நடந்தது அல்ல. எல்லாம் எதிர்பாராமல் நடந்ததுதான்.
என் மகள் நைனிகா நடிகையானது கூட அப்படித்தான். நான் மீண்டும் திருமணம் செய்து கொள்வது பற்றி பலவிதமான செய்திகள் வருகின்றன. ஆனால் இதில் உண்மையில்லை. இப்போதைக்கு எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை. என்னுடைய கணவர் இறந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இன்று வரை அவரது இறப்பை என்னால் ஈடு செய்ய முடியவில்லை. ஆனால், அதற்குள் மறுமணம் குறித்த பேச்சு வந்திருக்கிறது.
ஒரு ஹீரோ தனியாக இருந்தால் பிரச்சனை இல்லை. அவர் குறித்து இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதில்லை. இதுவே, ஒரு ஹீரோயின் தனியாக இருந்தால் இதுபோன்ற வதந்திகள் தொடர்ந்து வெளியாகிறது. ஹீரோயின் என்றில்லை. பொதுவாக, பெண்கள்தான் இதுபோன்ற வேதனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இது என்னை மட்டுமில்லாமல் என்னுடைய குடும்பத்தினரையும் பாதிக்கிறது. இப்போதுவரை, என்னுடைய மறுமணம் குறித்து நான் யோசிக்கவில்லை
இப்படி தனியாகவே வாழ்க்கையை கழித்து விட முடியுமா? என்று கேட்கிறார்கள். ஏன் முடியாது. எத்தனையோ பேர் தனியாகவே வாழ்க்கையை கழிக்கிறார்கள். இப்போதைக்கு எனது முழு கவனமும் எனது மகள்தான். மிகவும் சிறிய குழந்தை அவள். அவளது வாழ்க்கைதான் எனக்கு முக்கியம்.
இப்போதுகூட என்னை மனதில் வைத்து எனக்காகவே கதைகளை உருவாக்கிக்கொண்டு படம் எடுக்க பலர் வருகிறார்கள். இதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நாளை என்ன நடக்கும் என்பது நம் கையில் இருக்காது. எனவே இந்த நேரத்தில் மீண்டும் திருமணம் பற்றி நினைக்கவும், பேசவும் எனக்கு விருப்பமில்லை' என்று தெரிவித்தார்.