சினிமா பைத்தியங்கள் இல்லை... படம் தோல்வியால் நடிகை சார்மி வருத்தம்
|சினிமா படங்கள் மீது இதற்கு முன்பு இருந்த பைத்தியம் இப்போது இல்லை என படம் தோல்வியால் நடிகை சார்மி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தி, தெலுங்கில் வெளியான பல படங்கள் சமீப காலமாக பெரிய தோல்வியை சந்தித்து வருகின்றன. வலைத்தளங்களிலும் சர்ச்சை கருத்துகளை வெளியிடும் நடிகர் நடிகைகள் படங்களை புறக்கணிக்கும்படி ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யும் போக்கும் அதிகரித்து வருகிறது.
இந்த வரிசையில் விஜய்தேவரகொண்டா நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வந்துள்ள லைகர் படமும் தோல்வி அடைந்துள்ளது. லைகர் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை சார்மி அளித்துள்ள பேட்டியில், ''மக்கள் மனம் மாறி விட்டது. குடும்பத்தோடு வீட்டில் இருந்து தொலைக்காட்சியிலும், ஓ.டி.டி. தளங்களிலும் படங்களை பார்த்து மகிழ விரும்புகிறார்கள். பெரிய பட்ஜெட் படங்களையும் தொலைக்காட்சியில் பார்க்கலாம் என்ற மனப்போக்கு உருவாகி உள்ளது. அவர்களை தியேட்டருக்கு வரவழைப்பது கஷ்டமாகி விட்டது.
சினிமா படங்கள் மீது இதற்கு முன்பு இருந்த பைத்தியம் இப்போது ரசிகர்களுக்கு இல்லை. லைகர் படத்தை பல தடைகளை தாண்டி தியேட்டரில் வெளியிட்டோம். ஆனாலும் படம் தோல்வி அடைந்து இருப்பது மனதுக்கு வேதனை அளிக்கிறது" என்றார்.