தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது - முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு சூர்யா நன்றி
|ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் தேர்வானதற்கு வாழ்த்து தெரிவித்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் பிரிவில் இந்தியா சார்பாக நடிகர் சூர்யா அழைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராகவிருக்கும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை நடிகர் சூர்யா பெற்றுள்ளார்.
ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சூர்யாவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் "தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கார் விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்! வானமே எல்லை! என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா, தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். சூர்யா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது. நல்ல படைப்புகளைத் தொடர்ந்து தர முயற்சிக்கிறேன்.. தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள்" என்று கூறியுள்ளார்.