புதுச்சேரியில் 'லியோ' படத்தை காலை 9 மணிக்கு மேல் திரையிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு
|புதுச்சேரியில் ‘லியோ’ படத்தை காலை 9 மணிக்கு மேல் திரையிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் வரும் 19-ந்தேதி(நாளை) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் 'லியோ' படத்தின் முதல் காட்சியை காலை 9 மணிக்கு திரையிட அனுமதி வழங்கபட்டுள்ளது.
இதனிடையே புதுச்சேரியில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர், புதுச்சேரியில் காலை 7 மணிக்கு 'லியோ' படத்தின் முதல் காட்சியை திரையிட அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து புதுச்சேரியில் 'லியோ' படத்தின் முதல் காட்சியை காலை 7 மணிக்கு திரையிட மாவட்ட கலெக்டர் வல்லவன் அனுமதி அளித்தார்.
இந்த நிலையில் புதுச்சேரியில் 'லியோ' படத்தை காலை 9 மணிக்கு மேல் திரையிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்படுவதால், புதுச்சேரியில் காலை 7 மணிக்கு முதல் காட்சியை திரையிட விநியோகஸ்தர்கள் அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் 'லியோ' படத்தின் முதல் காட்சி தொடங்கும் அதே நேரத்தில் புதுச்சேரியிலும் முதல் காட்சியை தொடங்குவதற்கு திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் புதுச்சேரியில் உள்ள விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.