உலகு தாங்காது; போரை நிறுத்துங்கள் - கவிஞர் வைரமுத்து பதிவு
|உலகப் பொருளாதாரம் பின்னல் மயமானது. போரை நிறுத்துங்கள் என்று கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
சென்னை,
சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் நாட்டின் தூதரகம் மீது இஸ்ரேல் இந்த மாத தொடக்கத்தில் வான்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதிகள் 2 பேர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் கடும் கோபமடைந்தது. இந்த தாக்குதலுக்காக இஸ்ரேலுக்கு எந்த நேரத்திலும் தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் சூளுரைத்தது. இதனால் இருநாடுகளுக்கும் இடையில் பதற்றமான சூழல் நீடித்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஈரான் நாட்டின் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதே நேரத்தில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட டிரோன்கள், நீண்ட தூர மற்றும் நடுத்தர ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஈரான் வீசியது.
எனினும் பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் நடுவானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டன. இதனால் உயிர் சேதம் போன்ற பெரும் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இருந்த போதிலும் ஒரு சில ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பையும் கடந்து உள்ளே நுழைந்தன. அவை தெற்கு இஸ்ரேலில் உள்ள விமானப்படை தளம் உள்ளிட்ட இடங்களை தாக்கின. இதில் சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் போரை நிறுத்துங்கள் என்று ஈரான்-இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு எதிராக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இஸ்ரேல் மீது ஈரானும், ஹமாஸ் மீது இஸ்ரேலும் விசிறியடிக்கும் எறிகணைகள், பாப்பாரபட்டியில் ஈயோட்டிக்கொண்டு பலாச்சுளை விற்றுக்கொண்டிருக்கும் பஞ்சக் கிழவியின் கூடையை உடைக்கின்றன.
உலகப் பொருளாதாரம் பின்னல் மயமானது. உலகு தாங்காது; நிறுத்துங்கள் போரை. ஐ.நாவால் முடியாது; அவரவர் நிறுத்தலாம்" என்று தெரிவித்து உள்ளார்.