ராமராஜன் நடித்துள்ள 'சாமானியன்' படத்தின் டிரைலர் வெளியானது
|ராகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சாமானியன்' படத்தின் மூலம் ராமராஜன் சினிமாவில் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்குகிறார்.
தமிழ் சினிமாவின் 90 காலகட்டங்களில் கிராமத்து படம் என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு வருபவர் ராமராஜன்தான். அந்த அளவு அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றுள்ளன. 'எங்க ஊரு பாட்டுக்காரன்', 'எங்க ஊரு காவல்காரன்', 'என்ன பெத்த ராசா', 'கரகாட்டக்காரன்', 'பாட்டுக்கு நான் அடிமை' போன்ற படங்கள் இன்றுவரை ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு வருகின்றன.
ராமராஜன் கடைசியாக 2012-ம் ஆண்டு 'மேதை' என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். ஆனாலும் அவ்வப்போது ராமராஜன் மீண்டும் நடிக்க வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்தன. இந்த நிலையில் ராமராஜன் தற்போது ராகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சாமானியன்' படத்தின் மூலம் சினிமாவில் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்குகிறார். இது ராமராஜனுக்கு 45-வது படமாகும்.
இந்த படத்தில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், வெங்கட், மைம் கோபி, கே.எஸ்.ரவிக்குமார், சரவணன், தீபா சங்கர், ஸ்ம்ருதி வெங்கட், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.