கருணாநிதி சொன்ன மூன்று சிவாஜிகள்
|26-6-2007 அன்று சாதனைத் திருவிழா என்ற பெயரில் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தின் 804-வது நாள் வெற்றி விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது. அப்போதைய முதல்-அமைச்சர் மு.கருணாநிதி தலைமை தாங்கிப் பேசினார்.
"சந்திரமுகி படத்தில் நடித்து இருக்கிறவர்கள் அத்தனை பேரும் அந்த கதாபாத்திரங்களாகவே மாறி நடித்திருப்பதும், எல்லாவற்றுக்கும் மேலாக நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தின் மூலமாகப் பெரும் புகழ் எய்தியிருப்பதும் மகிழ்ச்சி தருகிறது.
அவரது வெற்றிக்கு காரணம் எது என்றெல்லாம் எண்ணிப் பார்த்தேன். அவர் திரையுலகத்திலே மாத்திரமல்லாமல், தமிழ்நாட்டு மக்களுடைய உள்ளத்தில் எல்லாம், என்னைப் போன்றவர்களின் உள்ளத்தில் எல்லாம் இடம் பெற்றிருக்கிறார் என்றால், அதற்குக் காரணம்-எவ்வளவு மகத்தான வெற்றிகள் வந்தாலும், மலை போல வெற்றிகள் குவிந்தாலும், கடல் ஆழத்திற்கு வெற்றிகள் வந்து சேர்ந்தாலும், அவர் அடக்கமானவர்.
அந்த வெற்றிகள் எல்லாம் தனக்கு கிடைத்தது, தன்னால்தான் கிடைத்தது என்று எண்ணக் கூடியவர் அல்ல. எவர் ஒருவர் இந்த வெற்றிக்கெல்லாம் காரணம் தான்தான் என்று எண்ணிக்கொள்கிறாரோ அவர் வீழ்வது நிச்சயம். யார் ஒருவர் வெற்றிக்கு எல்லாம் காரணம் எல்லோரும் என்று கருதுகிறாரோ, அவர் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கக் கூடியவர். அந்த இரண்டாவது இடத்திலே இருப்பவர் தான் நம்முடைய அன்பிற்குரிய ரஜினிகாந்த்.
நம்மிடம் மூன்று சிவாஜிகள் உண்டு. ஒரு சிவாஜி, மராட்டிய மாவீரன். இன்னொரு சிவாஜி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இப்போது இந்த சிவாஜி, நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த மூன்று சிவாஜிகளும், சரித்திரத்தில் இடம் பெற்றப் பெயர்களாக இப்போது ஆகியிருக்கின்றன" என்றார்.
ரஜினிகாந்த் பேசும்போது, "சந்திரமுகி படத்தை ஆரம்பித்த போது ரஜினி பாட்ஷா, முத்து, படையப்பான்னு பண்ணிட்டு, அது என்ன சந்திரமுகினு ஒரு படம் பண்றார்? இது சரியா வராதுப்பா என்றார்கள். சிலர் நாலு வாரம்தான் என்றார்கள்.
ஒரு கதை உண்டு. ஒரு பெரிய மலை. அதில் மூன்று தவளைகள் ஏற முயன்றன. மலையின் வழிநெடுக பாம்புகள், தேள்கள் இருக்கின்றன. போகாதே! என்று பயம் காட்டினார்கள். ஒரு தவளை 100 அடி ஏறியதும் கீழே விழுந்துவிட்டது. இன்னொரு தவளை 300 அடி தூரம் ஏறி விழுந்துவிட்டது. மற்றொரு தவளை மட்டும் மலை உச்சியைத் தொட்டது. அந்தத் தவளைக்கு காது கேட்காது. அது மாதிரித்தான் ரஜினிக்கும் காது கேட்காது. இது சிவாஜி, என்.டி.ஆர்., கலைஞர் போன்றவர்களிடம் நான் கற்றுக் கொண்டது. எதை எடுக்கணும் எதை எடுக்கக் கூடாது என்று கலைஞருக்கு தெரியும். எத்தனை அனுபவங்கள். இந்த வயதிலும் எத்தனை சோதனைகள். பேசுகிறவர்கள் பேசட்டும். வாழ்க்கையில் சில மனிதர்கள் மத்தியில் செவிடாகி விடவேண்டும். அப்போதுதான் சாதிக்க முடியும்" என்றார்.