நட்புக்கு வந்த சோதனை... நண்பரின் பகீர் செயலால் நடிகை ஷம்மு ஷாலு வேதனை
|நடிகை ஷம்மு ஷாலு தனது 8 ஆண்டு கால நண்பர் செய்த பகீர் செயலால் வேதனை அடைந்து உள்ளார்.
சென்னை,
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்', 'மிஸ்டர் லோக்கல்' போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஐ போன் ஒன்றை வாங்கியுள்ளார்.
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த 9-ந்தேதி இரவு ஷாலு ஷம்மு நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
பின்னர் நிகழ்ச்சி முடிந்து சூளைமேட்டில் உள்ள அவரது நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். அடுத்த நாள் எழுந்து பார்க்கும்போது செல்போன் காணாமல் போயுள்ளது. இதனை அறிந்த ஷாலு ஷம்மு நட்சத்திர விடுதிக்கு சென்று தேடி பார்த்து உள்ளார்.
செல்போன் கிடைக்காத நிலையில், இதுதொடர்பாக பட்டினபாக்கம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். மேலும், ஐபோன் காணாமல் போன விவகாரத்தில் தன்னுடன் இருந்த நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறிய நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
நட்சத்திர ஓட்டல் விருந்து நிகழ்ச்சி மற்றும் சூளைமேட்டில் தன்னுடன் தங்கி இருந்தவர்கள் உள்ளிட்டவர்களின் பெயர் பட்டியலை போலீசில் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், ஷாலு ஷம்முவுக்கு டன்சோ மூலம் பார்சல் ஒன்று வந்து உள்ளது. அதில், காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட அவரது விலை உயர்ந்த ஐபோன் இருந்து உள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை ஷாலு ஷம்மு, தான் சந்தேகப்பட்ட நபர்தான் தனது செல்போனை திருடியிருப்பதாகவும், 8 வருட நட்பு வீணாகியுள்ளதாகவும், சமூக வலைதளத்தில் அவர் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். ஷாலு ஷம்முவின் இந்த பதிவு, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.