நாளை வெளியாகிறது 'இனிமேல்' பாடலின் டீசர்
|லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ள 'இனிமேல்' பாடலின் டீசர் நாளை வெளியாகிறது.
சென்னை,
தமிழ் சினிமாவின் ஆக்சன் படங்களை எடுப்பதில் கை தேர்ந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் எடுக்கும் படங்களில் அவருக்கென ஒரு தனி ஸ்டைல் இருக்கும். கடைசியாக 2023 -ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
கமல்ஹாசன் திரையுலக பயணத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் மிகவும் முக்கியமான படம். ரஜினி காந்தின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் 'இனிமேல்' என்ற தலைப்பில் ஒரு சுயாதீன பாடலை அறிவித்தது. சுருதி ஹாசன் இசையில் கமல்ஹாசனின் பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் நடிக்கவுள்ளார். 'விக்ரம்' படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜுடன் ராஜ்கமல் பிலிம்ஸ் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.
இந்த வெற்றி கூட்டணியில் அமையும் இப்பாடல் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இந்நிலையில், நாளை மாலை 6.30 மணிக்கு 'இனிமேல்' பாடலின் டீசர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஸ்ருதிஹாசன், எட்ஜ், ஷீ இஸ் எ ஹீரோ மற்றும் மான்ஸ்டர் மெஷின் போன்ற சுயாதீன ஆல்பங்களை ஏற்கெனவே வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.