தேசிய விருது பெற்ற 'கடைசி விவசாயி' படத்தின் கதை...!
|'கடைசி விவசாயி' திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதுக்கு தேர்வாகி இருக்கிறது
69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரிப்பில் வெளியான 'கடைசி விவசாயி' திரைப்படம் தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதுக்கு தேர்வாகி இருக்கிறது. இந்த படத்தில் நடித்த நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடைசி விவசாயி படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் 85 வயது விவசாயியாக நல்லாண்டி நடித்திருந்தார். அவருடன் விஜய் சேதுபதி, யோகிபாபு, முனீஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கடைசி விவசாயி படத்தின் கதை வருமாறு:-
கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களை விற்று விட்டு அங்குள்ள மக்கள் நகரத்திற்கு இடம்பெயர்ந்து விடுகின்றனர். 20 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த ஊருக்கு குலதெய்வத்தை வழிபட வருகிறார்கள். அப்போது சில வழிபாடுகளை கடைபிடித்ததாக வேண்டிய கட்டுப்பாடு உள்ளது. அதில் ஒன்றாக வழிபாட்டிற்கு புதுமரக்கால் நெல் தேவைப்படுகிறது. ஆனால் அனைவரும் விவசாய நிலத்தை விற்று விட ஒரேயொரு விவசாயியிடம் மட்டும் சிறிதளவு நிலம் உள்ளது. அவரிடம் ஒரு மரக்கால் நெல்லிற்காக ஒட்டுமொத்த ஊரே அவரிடம் வேண்டி நிற்கின்றனர். அந்த விவசாயியின் போராட்டம்தான் இந்த கடைசி விவசாயி படம்.
நிகழ்கால நடைமுறை தெரியாத, தன் விவசாய கடமைகளை மட்டும் தெரிந்து கொண்டு வாழும் முதியவர் நல்லாண்டி, நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக பேசும் இயல்பான பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் விருப்பத்துக்குரிய படமாகவும் மாறியது. கடைசி விவசாயி படத்தில் நடித்ததற்கு பிறகு, முதியவர் நல்லாண்டியின் நடிப்பு திறமை பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் நல்லாண்டி உடல்நலக் குறைவு காரணமாக தனது 85-வது வயதில் மரணம் அடைந்தார்.