டிக்கெட் கொடுத்த ராமராஜன் தியேட்டர் முதலாளியான கதை!
|நடிகர் ராமராஜனின் சொந்த ஊர், மதுரையை அடுத்த மேலூர் தாலுகா அலுவலகம் அமைந்துள்ள சொக்கம்பட்டி கிராமம். ஆரம்பத்தில் அதேப் பகுதியில் உள்ள பல்லவராயன்பட்டியில் இருந்த டூரிங் டாக்கீசில், அவர் வேலை செய்துவந்தார். பிறகு மேலூர் நகரில் கணேஷ் தியேட்டர் திறக்கப்பட்டது. அந்தத் தியேட்டரில் ராமராஜன் வேலைக்குச் சேர்ந்தார். தியேட்டரில் டிக்கெட் கொடுத்து வந்தார்.
அந்தத் தியேட்டர் முதலாளி மீனாட்சி சுந்தரம் என்ற சீமான் அடிக்கடிச் சென்னைக்கு வந்து, படங்களை சொந்தமாக வாங்கி திரையிட்டு வந்தார். அவர் வரும்போது ராமராஜனை உடன் அழைத்துச் செல்வது உண்டு. அந்த சமயத்தில் சினிமாத்துறையைச்சேர்ந்த பலரைச் சந்திக்கும் வாய்ப்பு ராமராஜனுக்கு கிடைத்தது.
தனக்கு நடிப்பில் இருக்கும் ஆர்வம் குறித்து தியேட்டர் முதலாளியிடம் ராமராஜன் சொல்லி இருந்தார். அவரும் வாய்ப்புக் கிடைக்கும் போது, தனக்குத் தெரிந்த சினிமா பிரபலங்கள் சிலரிடம் ராமராஜனைப் பற்றி கூறி இருந்தார்.
ஒருபடத்தில் கிராமத்து வாலிபர் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு ராமராஜனுக்கு திடீரெனக் கிடைத்தது. அதை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதன்பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார். இயக்குனராகவும் வளர்ந்தார்.
ஒரு சாதாரண தியேட்டர் தொழிலாளியாக தொடக்கத்தில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய ராமராஜன் பிற்காலத்தில் நடனா, நாட்டியா, நர்த்தனா என்ற தியேட்டர் வளாகத்துக்கே முதலாளி ஆனார். அந்த அனுபவங்களை ராமராஜனே நம்மிடம் சொல்ல விழைகிறார். கொஞ்சம் கீழே படியுங்கள்...
"நடனா காம்ப்ளக்சில் கரகாட்டக்காரன் படம் வெற்றிப்படமாக ஓடிக்கொண்டிருந்தது. அப்போது அந்த தியேட்டர் விற்கப்பட உள்ளதாக தகவல் வந்தது. நல்ல வருமானம் கிடைக்கிறது என்பதால் அந்த தியேட்டரை வாங்கினோம். அங்கு கரகாட்டக்காரன் படத்தை தொடர்ந்து ஓராண்டுக்கு மேல் ஓட்டினோம். அதன்பின் மற்ற தியேட்டர்களுக்கு கொடுத்தோம். மதுரையில் தொடர்ச்சியாக 400 நாட்களுக்கும் மேலாக அந்தப்படம் ஓடி, சாதனை படைத்தது. நடனா காம்ப்ளக்ஸ் மிக அருமையான கட்டிடக்கலையை வெளிப்படுத்தும் வகையில் கட்டப்பட்டு இருந்தது. மதுரையில் சொந்தமாக தியேட்டர் நடத்தியது எனக்கும் பெருமையைத்தந்தது.
என் தந்தையின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் ஒக்கூர். நான் சிறுவயதாக இருந்தபோது அங்கிருந்துதான் மேலூருக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தோம். எனவே ஒக்கூரில் டூரிங் டாக்கீஸ் கட்ட வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அந்த ஆசையை நடனா தியேட்டர் நிறைவேற்றித் தந்தது. 1990-ம் ஆண்டில் நடனா காம்ப்ளக்சை வாங்கினேன். கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் என்னுடைய கட்டுப்பாட்டில் இருந்தது. 2005-ம் ஆண்டில்தான் வேறொருவருக்கு விற்றோம். சில ஆண்டுகள் கழித்து அந்த வழியாக சென்றபோது நடனா தியேட்டர் இடிக்கப்பட்டு தரைமட்டமாகக் கிடந்தது. அதை பார்த்து நெஞ்சில் இடி விழுந்ததைப்போல இருந்தது"
இவ்வாறு நினைவு கூர்ந்தார், ராமராஜன்.