மத உணர்வை புண்படுத்தியதாக சர்ச்சை படத்துக்கு சீக்கிய அமைப்பு எதிர்ப்பு
|இந்தியில் 'யாரியன் 2' என்ற படம் தயாராகி உள்ளது. இதில் மீஸான் ஜாப்ரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தை அக்டோபர் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் 'யாரியன் 2' படத்தில் இடம்பெற்ற சஹுரே கர் என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதில் மீஸான் ஜாப்ரி வெறும் தலையுடன் கிர்பான் அணிந்து இருந்த காட்சி இடம்பெற்று இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மத உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக சீக்கிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சிரோன்மணி குருத்வாரா பிரபந்த கமிட்டி நிர்வாகி கூறும்போது, "சீக்கிய மத நம்பிக்கையின் ஐந்து தூண்களில் ஒன்றாக கிர்பான் உள்ளது. சீக்கியர்களுக்கு மட்டுமே அந்த அடையாளத்தை அணிய உரிமை உண்டு.
ஆனால் தலைப்பாகை இல்லாமல் நடிகர் மீஸான் ஜாப்ரி கிர்பானை அணிந்து இருப்பது தவறு. இந்த காட்சியை சமூக வலைதளங்களில் இருந்து உடனே நீக்க வேண்டும். இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுப்போம். மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகமும் இதனை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.