ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
|ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது.
சென்னை,
2012-ல் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான '3' படம் மூலம் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடித்த 'வை ராஜா வை' படத்தை இயக்கிய ஐஸ்வர்யா, அதன் பிறகு 'பயணி' என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி வரவேற்பை பெற்றார்.
இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கவுள்ளார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக உள்ளது. இந்நிலையில் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.