< Back
சினிமா செய்திகள்
விசித்ராவுக்கு நடந்ததுபோல எனக்கும் நடந்துள்ளது - காதல் பட நடிகை பரபரப்பு புகார்
சினிமா செய்திகள்

'விசித்ராவுக்கு நடந்ததுபோல எனக்கும் நடந்துள்ளது' - காதல் பட நடிகை பரபரப்பு புகார்

தினத்தந்தி
|
27 Nov 2023 7:33 AM IST

காதல் பட நடிகை சரண்யாவும் விசித்ராவைப்போல் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டதாக குற்றம் சாட்டி உள்ளார்.

சென்னை,

நடிகை விசித்ரா சினிமாவில், தான் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்தார். அவர் அப்போது, 'நான் படத்தில் நடித்து கொண்டிருந்தபோது தெலுங்கு ஹீரோ ஒருவர் என்னை அவரது அறைக்கு அழைத்தார். மேலும் படப்பிடிப்பில் சண்டை இயக்குனர் ஒருவர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார்' என்று பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு ஆதரவாக பலதரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காதல், பேராண்மை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை சரண்யாவும் விசித்ராவைப்போல் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டதாக குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் சரண்யா கூறும்போது, "பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்சினையை உடனடியாக சொல்ல வேண்டும். பல ஆண்டுகள் கழித்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன? என்று சிலர் விமர்சிக்கிறார்கள். பெரிய பிரபலமாக இல்லாதபோது ஒரு நடிகை சொல்லும் எதுவும் இங்கே எடுபடாது.

நடந்த அநியாயத்தை பற்றி வெளியே சொல்ல பெயர், புகழ், அதிகாரம் தேவைப்படுகிறது. விசித்ரா விஷயத்தில் இத்தனை ஆண்டுகள் கழித்து அவர் சொல்வதில் தவறு இல்லை. சினிமாவில் ஆணாதிக்கம் நிறைய இருக்கிறது. இங்கு பெண்களுக்கான பிரச்சினைகளை பார்க்க மாட்டார்கள். அதுவும் சம்பந்தப்பட்டவர் பெரிய ஹீரோ என்பதால் என்னவென்று கூட கேட்க மாட்டார்கள்.

எனக்கும் இதுபோல நிறைய பிரச்சினைகள் வந்திருக்கின்றன. இதையெல்லாம் தாண்டித்தான் வந்திருக்கிறேன். எனது பிரச்சினையை பற்றி பேசியிருந்தால் காது கொடுத்து கூட கேட்டிருக்க மாட்டார்கள். நல்ல நிலைமைக்கு வந்தால் மட்டும்தான் நமது குரல் அனைவருக்கும் கேட்கும்.

இங்கு கலையை நேசிக்காமல், சினிமாவை போதையாக நினைப்பவர்கள் மட்டும்தான் பெண்களை மோகப்பொருளாக பார்ப்பார்கள். இதை பெண்கள் தாண்டி வருவது பெரிய கஷ்டம். சினிமாவில் சொல்லப்படாத கதை இன்னும் ஆயிரம் இருக்கிறது'' என்றார்.

மேலும் செய்திகள்