< Back
சினிமா செய்திகள்
மீண்டும் தள்ளிப்போன ஆலம்பனா திரைப்படத்தின் ரிலீஸ்... விளக்கமளித்த தயாரிப்பு நிறுவனம்..!
சினிமா செய்திகள்

மீண்டும் தள்ளிப்போன 'ஆலம்பனா' திரைப்படத்தின் ரிலீஸ்... விளக்கமளித்த தயாரிப்பு நிறுவனம்..!

தினத்தந்தி
|
16 Dec 2023 6:45 PM IST

அயலான் மற்றும் ஆலம்பனா படங்களை வெளியிட 4 வாரங்கள் தடை விதித்து கடந்த 14ம் தேதி நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை,

புதுமுக இயக்குனர் பாரி கே.விஜய் இயக்கத்தில் நடிகர் வைபவ் நடித்திருந்த படம் 'ஆலம்பனா'. இந்த படத்தில் பார்வதி நாயர், முனிஷ்காந்த், காளி வெங்கட், ஆனந்த் ராஜ், பாண்டியராஜ், லியோனி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் மற்றும் கொஸ்துப் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

குழந்தைகளுக்கு பிடித்த பேண்டஸி கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் நடிகர் முனிஷ்காந்த் அலாவுதீன் பூதம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2021ம் ஆண்டு தொடக்கத்தில் நிறைவடைந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளி போனது.

இதற்கிடையே இந்த படம் கடந்த 15-ந்தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தங்களுக்குத் தரவேண்டிய ரூ.14.70 கோடி நிலுவைத் தொகையைத் தரவில்லை என்று கூறி டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

அந்த நிலுவைத் தொகையைக் கொடுக்கும் வரை அயலான், ஆலம்பனா படங்களை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்றும் டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கை கடந்த 14ம் தேதி விசாரித்த நீதிபதி சரவணன், டி.ஆர்.எஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் வாதத்தில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி, அயலான் மற்றும் ஆலம்பனா படங்களை வெளியிட 4 வாரங்கள் தடை விதித்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'கௌஸ்துப் எண்டெர்டைன்மெண்ட் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஆலம்பனா' படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படுகிறது என்கிற தகவலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். வைபவ், பார்வதி நாயர், முனிஷ்காந்த், ரோபோ சங்கர், திண்டுக்கல் ஐ.லியோனி, பாண்டியராஜன் மற்றும் பலர் நடித்துள்ள 'ஆலம்பனா' திரைப்படம் டிசம்பர் 15, 2023 அன்று வெளியாகும் என அறிவித்திருந்தோம்.

அறிவித்த தேதியில் திரைப்படத்தை வெளியிட அர்ப்பணிப்புடன் நாங்கள் முயற்சித்த போதிலும், எதிர்பாராத சில சூழ்நிலைகள் எங்களின் பலத்திற்கும் அப்பாற்பட்டு இருக்கின்றன. எனவே, இந்த தவிர்க்க முடியாத சூழலால் திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

'ஆலம்பனா' குழந்தைகள் மற்றும் குடும்பங்களை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்பதால், அவர்களுக்கான சிறந்த அனுபவத்தை வழங்குவதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். எனவே, அவர்களுக்கு மிகுந்த சுவாரஸ்யமான அனுபவத்தை குடுக்கும் வகையில் ஆலம்பனா திரைப்படத்தின் வெளியீட்டை அதற்கு பொருத்தமான தேதியில் அறிவிக்கப்படும் என்பதை கூறிக்கொள்கிறோம்.

இந்த தவிர்க்க முடியாத சூழல் காரணமாக எங்களின் பார்வையாளர்கள், திரைப்பட வெளியீட்டாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகைகள் மற்றும் ஊடக நண்பர்கள் என அனைவருக்கும் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். உங்கள் அனைவரின் புரிதலும், ஆதரவும் எப்போதும் போல இனிமேலும் தொடர வேண்டும் என்று மனதார கேட்டுக்கொள்கிறோம்' என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்