ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'டிரைவர் ஜமுனா' படத்தின் ரிலீஸ் தள்ளி வைப்பு
|நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'டிரைவர் ஜமுனா' திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வத்திக்குச்சி' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. மேலும் இந்த படத்தில் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்துள்ளது.
இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "நவம்பர் 11 தேதியன்று வெளியாவதாக இருந்த 'டிரைவர் ஜமுனா' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது. தாமதத்திற்கு வருந்துகிறோம்.
அத்துடன் மிக விரைவில் திரைப்படத்தை உங்களின் பார்வைக்கு கொண்டு வர இருக்கிறோம். புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.