பிருத்விராஜ் நடிக்கும் 'தி கோட் லைப்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்
|சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
சென்னை,
தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இவர் தற்போது தி கோட் லைப் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் பிளெசி இயக்கி உள்ளார்.
மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான நாவலான 'ஆடுஜீவிதம்' கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் எழுதிய இந்த நாவல் 12 மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கேரளாவின் பசுமையான கடற்கரையிலிருந்து வெளிநாட்டில் அதிர்ஷ்டத்தைத் தேடி இடம்பெயர்ந்த இளைஞனின் வாழ்க்கை கதையைத்தான் இந்த நாவல் விளக்குகிறது.
இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே தொடங்கி பல்வேறு காரணங்களால் தடைபட்டு சமீபத்தில் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. தற்போது டப்பிங், இசை, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படம் ஏற்கனவே ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது படத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி தி கோட் லைப் திரைப்படம் மார்ச் 28ம் தேதி வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.