இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய 'மஞ்சுமல் பாய்ஸ்' பட தயாரிப்பாளர்கள்?
|இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் இழப்பீடாக ரூ.2 கோடி கேட்கப்பட்டது.
சென்னை,
தமிழ்நாட்டின் கொடைக்கானல் சுற்றுலா பகுதியில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான 'மஞ்சுமல் பாய்ஸ்', மொழிகள் தாண்டி அனைத்து மாநிலங்களில் உள்ள பார்வையாளர்களையும் கவர்ந்தது. உலகெங்கிலும் பரவலாக ரசிக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் ரூ. 200 கோடிகளும் மேல் வசூலித்தது.
'மஞ்சுமல் பாய்ஸ்' படத்தில், கமல் நடித்து 90களில் வெளியான குணா படத்தின் "கண்மணி அன்போடு காதலன்" என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து, அனுமதியின்றி இப்பாடலை பயன்படுத்தியதாக கூறி, 'மஞ்சுமல் பாய்ஸ்' பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் சரவணன் நோட்டீஸ் அனுப்பினார்.
அதில், 'பாடலின் உரிமையாளரான இளையராஜாவிடம் முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்தியிருக்க வேண்டும். பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் அல்லது பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த நோட்டீஸைத் தொடர்ந்து, 'மஞ்சுமல் பாய்ஸ்' தயாரிப்பாளர்கள் இளையராஜாவை சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆரம்பத்தில் இழப்பீடாக ரூ.2 கோடி கேட்கப்பட்டது, ஆனால் இந்த பேச்சு வார்த்தையின் முடிவில் தயாரிப்பாளர்கள் ரூ.60 லட்சம் கொடுத்து பிரச்சினையை முடித்துள்ளதாக கூறப்படுகிறது.