படமாகும் வாழ்க்கை கதை... விராட் கோலியாக நடிக்கும் விஜய்தேவரகொண்டா?
|படமாகும் வாழ்க்கை கதையில் விராட் கோலியாக நடிக்க விஜய்தேவரகொண்டா விருப்பம் தெரிவித்து உள்ளார்.
கிரிக்கெட் வீரர்கள் டோனி, சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை கதைகள் திரைப்படங்களாக வந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. டோனி படத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் நடித்து இருந்தார். கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை 83 என்ற பெயரில் படமாக வந்தது. இந்திய கிரிக்கெட் அணி கபில்தேவ் தலைமையில் உலக கோப்பையை வென்ற நிகழ்வை இந்த படத்தில் காட்சிப்படுத்தி இருந்தனர். இதில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்து இருந்தார்.
தற்போது விராட் கோலி வாழ்க்கையை படமாக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. இதில் விராட் கோலி பாத்திரத்தில் நடிக்க விஜய்தேவரகொண்டா விருப்பம் தெரிவித்து உள்ளார். துபாய் சென்ற விஜய்தேவரகொண்டாவிடம் நீங்கள் எந்த கிரிக்கெட் வீரர் வாழ்க்கை கதையில் நடிக்க ஆர்வப்படுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து விஜய்தேவரகொண்டா கூறும்போது, ''கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை கதையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஏற்கனவே நடித்து விட்டார். எனக்கு விராட் கோலி வாழ்க்கை கதை படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் விராட் கோலியாக நடிப்பேன்" என்றார்.