வெப் சீரிஸாக வெளியாகும் பிரபல ரவுடி லிங்கத்தின் வாழ்க்கை
|பல உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இந்த வெப் சீரிஸை விகடன் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
சென்னை,
கன்னியாகுமரியை சேர்ந்த பிரபல ரவுடி லிங்கத்தின் வாழ்க்கை வெப் சீரிஸாக வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வெப் வெப் சீரிஸில் பரியேரும் பெருமாள், மதயானைக் கூட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் கதிர் ரவுடி லிங்கம் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பல உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இந்த வெப் சீரிஸை விகடன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. சங்கர் இயக்கும் 'இந்தியன்-2' படத்துக்கு வசனம் எழுதும் லட்சுமி நாராயணன் இயக்கவுள்ள இந்த சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரவுடி லிங்கம் :
கன்னியாகுமரி அருகே நாச்சியார் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் லிங்கம். பிரபல ரவுடியான இவருக்கும், மற்றொரு தரப்பு ரவுடியான பிரபு என்பவருக்கும் இடையே கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் இருதரப்பை சேர்ந்த சிலர் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே போலீசார் ஒரு வழக்கில் ரவுடி லிங்கத்தை கைது செய்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்திருந்தனர். 1996-ம் ஆண்டு லிங்கம் இருந்த சிறைக்குள் ஒரு கும்பல் புகுந்து அவரை கொடூரமாக கொன்றது. அங்கு அவருடைய தலையை மட்டும் துண்டித்து நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அண்ணா பஸ் நிலைய பகுதியில் வைத்து விட்டு தப்பினர்.
சிறைக்குள் புகுந்து தலை துண்டிக்கப்பட்டு ரவுடி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.