'தி கேரளா ஸ்டோரி' பட நடிகை விபத்தில் சிக்கியதாக பரவிய தகவல் - விளக்கம் கொடுத்த அதா சர்மா
|விபத்து குறித்து கேள்விப்பட்ட ரசிகர்கள் தொடர்ந்து அதா சர்மா குறித்து சமூக வலைதளங்களில் விசாரித்து வருகிறார்கள்.
மும்பை,
இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்த 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம், கடந்த மே 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே பெரும் சர்ச்சை ஏற்பட்டு வந்தது. இந்த படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வந்தன.
திரைப்படம் வெளியான பிறகு, இந்த படம் பிரிவினைவாத கருத்துக்களை கொண்டிருப்பதாக கூறி பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் படத்தைத் திரையிடவில்லை. தமிழ்நாட்டிலும் முதல் நாள் வெளியிட்டு மறுநாள் தியேட்டகளில் படம் ஓடவில்லை.
இவ்வாறு பல எதிர்ப்புகள் கிளம்பி வந்த நிலையில் சமீபத்தில் படத்தில் நடித்திருந்த நடிகை அதா சர்மாவுக்கு விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது. அவர் விபத்தில் சிக்கிய தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள், தொடர்ந்து அதா சர்மா குறித்து சமூக வலைதளங்களில் விசாரித்து வருகிறார்கள். படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் சதி வேலையாக இருக்கக்கூடும் என்று சிலர் எச்சரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இது குறித்து நடிகை அதா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அந்த பதிவில், "இது தற்செய்லாக நடந்த விஷயம்தான், விபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை. அதனால் ரசிகர்கள் யாரும் பயம்கொள்ள வேண்டாம். தொடர்ந்து என்னை போனில் விசாரித்தவர்களுக்கும் நன்றி" என்று பதிவிட்டிருக்கிறார்.